குமரி மாவட்டம் சுசீந்திரம் அடுத்த நல்லநாயக்கன் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (எ) கஞ்சா அந்தோணி (வயது 45). இவருக்கு சுப்புலட்சுமி, ஜாய்ஸ் மேரி என்று இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் மீது வெளிநாட்டு விமானப் பணிப்பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கு உட்பட, குமரி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில், 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மேலும், மாவட்டம் முழுவதும் இவர் மூலம் கஞ்சா விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் தனிப்படைக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின் அடிடையில் இன்று (ஆக. 28) காலை, தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் சாம்சன் தலைமையிலான காவல் துறையினர், கஞ்சா அந்தோணியின் வீட்டைச் சுற்றி வளைத்தனர்.
இதையறிந்த அந்தோணி, வீட்டை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, ”குடும்பத்தினருடன் கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொள்வேன்” எனக் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அதனை காணொலியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் கஞ்சா அந்தோணியை கைது செய்யாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய தனிப்படைக் காவல் துறை அலுவலர் ஒருவர், ”ஒவ்வொரு குற்றவாளியும் இதுபோல் தற்கொலை மிரட்டல் விடுத்தால் அவர்களை எப்படி கைது செய்வது? காவல் துறையினர் அதிரடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்தால், அதனை திரித்துக்கூறி காவல் துறைக்கு கெட்டப் பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர்” என வேதனைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து பேர் 24 மணி நேரத்தில் கைது!