வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும், தென் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரிக்கு 20 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் இன்று காலை அனுப்பிவைக்கப்பட்டனர்.
மேலும் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலைக்குச் செல்லும் சுற்றுலாப் படகுப் போக்குவரத்து தற்காலிகமாக ரத்துசெய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்குச் செல்லும் சாலைகள் பேரிகார்டு கொண்டு அடைக்கப்பட்டு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கன்னியாகுமரியில் பாசி, ஊசி போன்றவற்றை வியாபாரம் செய்யும் நரிக்குறவர்கள் கடற்கரைப் பகுதிகளிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அனுப்பிவைக்கப்பட்டனர். அவ்வாறு அனுப்பிவைக்கப்பட்டவர்கள் கன்னியாகுமரி பேருந்து நிலையத்தில் வந்து தஞ்சம் புகுந்தனர்.
இதனை அறிந்த பேரூராட்சி நிர்வாகத்தினர் பேருந்து நிலையத்திற்குச் சென்று நரிக்குறவர்களைக் கணக்கெடுத்து புயல்வர இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரவரது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைத்தனர். இதன்காரணமாக சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: புரெவி புயல்: இராமநாதபுரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்!