கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலைய அதிகாரிக்கு நேற்று (அக்.11) காலையில் ஒரு கடிதம் வந்துள்ளது. அந்த கடிதத்தை அதிகாரிகள் பிரித்து பார்த்துள்ளனர். அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து எழுதப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. அதிலும், அந்த கடிதம் ஒரு அமைப்பின் பெயரில் அனுப்பப்பட்டு இருந்துள்ளது.
அதில், ‘நாகர்கோவில் தலைமை தபால் அலுவலகத்திற்கு நேற்று (அக்.11) காலையில் வரும் பார்சலில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அது வெடித்து உங்களுடைய அலுவலகம் சிதறி சின்னா பின்னமாகப் போகிறது. எனவே தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ளவும், இந்த தகவலை நீங்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் கவலை இல்லை” என எழுதப்பட்டு இருந்தது.
அந்த கடிதத்தில் கடைசியாக தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான அல்கொய்தா அன்சாரி அமைப்பு என எழுதப்பட்டு இருந்தது. இதனைப் படித்து பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். மேலும், தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக வந்திருந்த பொதுமக்கள் இடையே தகவல் கசியத் தொடங்கியது.
உடனே பொதுமக்கள் பலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினர். ஊழியர்கள் பதற்றத்துடன் பணியாற்றினர். உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில், தலைமை தபால் நிலைய முதுநிலை தபால் அதிகாரி செல்வராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், வடச்சேரி போலீசாரும், வெடிகுண்டு கண்டறியும் பிரிவைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழு, தலைமை தபால் நிலையத்திற்கு வந்து சோதனை நடத்தினர். வெடிகுண்டு கண்டறியும் பிரிவினர் தாங்கள் அழைத்து வந்த மோப்ப நாய் உதவியுடன் தபால் நிலையத்திற்கு வந்த பார்சல்கள் அனைத்தையும் மோப்பம் பிடிக்கச் செய்து வெடிகுண்டு சோதனை நடத்தினர்.
அனைத்து அலுவலகப் பிரிவுகளிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் போலீசார் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. கடிதத்தில் இன்று வெடிகுண்டு வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால் தபால் நிலையத்திற்கு வெளியூர்களில் இருந்து வரும் பார்சல் மற்றும் உள்ளுர் மக்கள் அனுப்ப கொண்டு வரும் பார்சல்கள் என அனைத்தையும் சோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கடிதம் எழுதிய மர்ம நபர்கள் யார், அந்த கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டது, என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது வடிவீஸ்வரம் தபால் நிலையத்தில் இருந்து வந்ததாக அஞ்சல் முத்திரை பதிவாகி இருந்துள்ளது. இதையடுத்து போலீசார் வடிவீஸ்வரம் தபால் நிலையப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, சுசீந்திரம் அடுத்த மருங்கூர் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை பிடித்தனர்.
பின், விசாரணை நடத்தியபோது தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியதை அசோக்குமார் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும், அசோக்குமார் எதற்காக வெடிகுண்டு கடிதத்தை அனுப்பினார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில், அசோக்குமார் கடந்த சில ஆண்டுகளாக தலைமை தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராக தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்து உள்ளார்.
பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை வைத்து உள்ளார். ஆனால், பணி நிரந்தரம் செய்யப்படாமல், மாறாக பணியில் இருந்து நீக்கி உள்ளனர். இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அசோக்குமார் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக கூறி உள்ளார். மேலும், போலீசார் அசோக்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க:“நாளைய போராட்டத்தில் அமைச்சரைச் சந்திக்க வேண்டியதில்லை” - டிட்டோ ஜாக் அறிவிப்பு