கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை கடந்த 25ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து பெய்துவருகிறது. தற்போது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்துவருகிறது.
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, இலங்கையை ஒட்டியுள்ள கடற்பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசும் எனவும், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகப் பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.
இந்த மீன்பிடி துறைமுகங்களைத் தங்குதளமாகக் கொண்டு ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுவந்த 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. குளச்சல், முட்டம், மண்டைக்காடு, குறும்பனை, தேங்காய்பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 4,000-க்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை, படகுகள் பாதுகாப்பாக கரையிலேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தொடர் மழையால் பல்வேறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரபல சுற்றுலாத் தலமான திற்பரப்பு அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் எங்குப் பார்த்தாலும் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்து சிலர் காயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: கூடுதலாக 200 சிறப்பு மருத்துவ முகாம்கள் - தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்