குளச்சல்: கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகுகள் ஆழ்கடலில் 10 முதல் 20 நாட்கள் வரை தங்கி மீன்பிடித் தொழில் செய்து பின்னர் கரை வந்து சேர்வார்கள். அந்த வகையில் குளச்சலைச் சேர்ந்த டொனோட்டஸ் என்பவரின் விசைப்படகு 15 நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க சென்று நேற்று இரவு கரை வந்து சேர்ந்துள்ளது.
விசைபடகில் தங்கி பணிபுரியும் மீனவர்கள் விசை படகிலேயே சமையல் செய்து சாப்பிடுவது வழக்கம். நேற்று நல்லிரவு விசைப்படையில் உள்ள சமையல் அறையில் சமையல் செய்து கொண்டிருந்த போது கேஸ் ஸ்டவ்வின் ட்யூபில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்துள்ளது. பலமான காற்று வீசி வந்ததால் மீனவர்களால் அணைக்க முடியவில்லை, மளமளவென பரவிய தீயால் படகு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் உடனடியாக படகில் இருந்து கீழே இறங்கினர். இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. அதேநேரத்தில் படகில் இருந்து ஜிபிஎஸ், எக்ஸ் 4 சவுண்ட் ஒயர்லெஸ் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது.
சம்பவம் குறித்து அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த குளச்சல் தீயணைப்புத் துறை வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்கள் தப்பியது. தீ விபத்து தொடர்பாக குளச்சல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குடையை ரெடியா வையுங்க.. ஜன.27 முதல் 28 வரை மழைக்கு வாய்ப்பு!