தமிழ்நாடு முழுவதும் பாஜக தனது உறுப்பினர்களை அதிகப்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக உறுப்பினர்களை இணைக்கும் பொறுப்பாளர்கள் கூட்டம் மாவட்டந்தோறும் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், மாநில பாஜக தலைவர் தமிழிசை சவந்தரராஜன், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “திமுக செல்வாக்கை இழந்துவருகிறது என்பதை வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் காட்டுகிறது.
தேர்தல் நேரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கை நடந்தது. அதனால் வேலூரில் பரப்புரைக்கு செல்ல முடியவில்லை. அதிமுக அரசு நன்றாகச் செயல்படுகிறது என்பதை மக்கள் உணர்ந்ததால்தான் இவ்வளவு வாக்குகளை அளித்துள்ளனர்” என்றார்.