கன்னியாகுமரி: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக நான்கு இடங்களில் வெற்றிபெற்று ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பிப் பார்க்க செய்தது.
இந்த நான்கு உறுப்பினர்களில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர். காந்தி முக்கியமானவராக கருதப்பட்டார்.
இவர், ஏற்கெனவே ஆறு முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த நிலையில், கடந்த தேர்தலில் நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றிபெற்றார். காலில் செருப்பு கூட அணியாமல் எப்போதும் வெள்ளை வேட்டி சட்டையுடன் மிகவும் எளிமையானவராக காந்தி அறியப்படுகிறார். எனவே, அவரது எளிமை தான் இந்த வெற்றிக்கு காரணம் என்று பலரும் கருதினர்.
எம்.ஆர். காந்தியின் பேரனா?
இந்தச் சூழலில், எம்.ஆர். காந்தியின் பேரன் என்று கூறிக்கொண்டு இளைஞர் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் இருந்தபடி போட்டோ ஒன்றை பதிவிட்டார். 'அம்ரிஷ் பாஜக' என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் அந்த படம் பதிவிடப்பட்டிருந்தது. அந்த வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாமல் அதற்கு பதில் 'கிரண்ட்சன் ஆப் நாகர்கோவில் எம்எல்ஏ ஸ்ரீ எம்ஆர் காந்தி' என்று எழுதப்பட்டிருந்தது.
மிகவும் எளிமையான மனிதர் என்று அறியப்பட்ட எம்.ஆர். காந்தி பெயரைப் பயன்படுத்தி, இளைஞர் செய்த அந்த ஆடம்பர செயல் பலரையும் அதிர்ச்சி அடையசெய்தது. மேலும், இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேதேசமயம், திருமணம் முடித்துக் கொள்ளாமல் வாழ்ந்துவரும் எம்.ஆர். காந்திக்கு எப்படி பேரன் இருக்க முடியும் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்தது.
உரிமையில் பதிவிட்டுவிட்டார்... விட்டுவிடுங்கள்
இதுகுறித்து, விசாரித்தபோது அந்த இளைஞர் எம்.ஆர். காந்தியின் உதவியாளரான கண்ணன் என்பவரின் மகன் என்பது தெரியவந்தது. அதாவது, சுமார் 30 ஆண்டுகளாக கண்ணன், எம்.ஆர். காந்தியுடன் நெருக்கமாக இருந்து வருவதாகவும், அதன் பேரில் கண்ணனின் மகன் உரிமையோடு எம்.ஆர். காந்தியை தனது தாத்தா என்று அடையாளப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து, எம்.ஆர். காந்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினோம். அதற்கு பதில் அளித்த அவர், "இது ஒரு சின்ன விஷயம், இதை பெரிதுபடுத்த வேண்டாம். எனது உதவியாளர் கண்ணனின் மகன்தான் அந்த இளைஞர். ஏதோ சின்ன வயசு என்பதால் ஆர்வத்தில் இப்படி நடந்துகொண்டார்.
கண்ணன் 30 ஆண்டுகளாக என்னுடன் இருக்கிறார். அந்த உரிமையோடு அவன் அப்படி நடந்து கொண்டிருக்கலாம். இருப்பினும் அவரை நேரில் அழைத்து இனிமேல் இப்படி நடந்துகொள்ள வேண்டாம் எனக் கூறினேன். மேலும், சம்பந்தப்பட்ட புகைப்படத்தை நீக்கும் படியும் கேட்டுக் கொண்டேன். இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்: திறந்துவைத்த ஸ்டாலின் - மக்களுக்கு என்ன பயன்?