கன்னியாகுமரி அருகே தென்தாமரைகுளத்தை அடுத்த காட்டுவிளையில் தனியார் கோயில் வளாகத்தில் ஐந்து அடி உயரத்தில் பாரதமாதா சிலை அமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காவல்துறையினர் அங்கு சென்று பாரதமாதா சிலையை துணியால் மூடி மறைத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், நிர்வாகிகள் மூடப்பட்ட பாரதமாதா சிலையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதை அறிந்த கன்னியாகுமரி டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று மீண்டும் சிலையை மூட முயன்றனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் பாஜகவினர் 37 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இச்சம்பவத்தை கண்டித்து நாகர்கோவில், கொட்டாரம், ராஜாக்கமங்கலம் உள்பட மாவட்டத்தில் 13 இடங்களில் நேற்று (மே 22) மாலையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 347 பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க... திமுகவில் சாதிய வேறுபாடுகள் வளர்க்கப்படுகின்றன - பாஜகவில் இணைந்த பின் வி.பி துரைசாமி பேச்சு!