கன்னியாகுமரி: கேரளா மாநிலம் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகப் பரவிவரும் பறவைக்காய்ச்சல் காரணமாக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாத்து, கோழி உள்ளிட்ட பறவைகள் இறந்தன.
இதனைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குமரி மாவட்டம் தமிழ்நாடு - கேரளா எல்லைப்பகுதியான படந்தாலுமூடு பகுதியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் சிறப்பு சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு, கேரளாவிலிருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
கேரளாவிலிருந்து கோழி தீவனங்கள், கோழிகள் ஏற்றிவரும் வாகனங்களை எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டுவருகின்றன.
அதேபோல குமரி மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளிலும் கால்நடை பராமரிப்புத் துறை கண்காணிப்புத் தீவிரப்படுத்ப்பட்டுள்ளது.
தென்காசியிலும் தீவிர சோதனை
தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச்சாவடியில் அமைந்துள்ள பறவைக்காய்ச்சல் நோய்த்தடுப்பு முகாம் சார்பில் இன்று காலை முதல் தடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக கால்நடை மருத்துவர் தலைமையில் ஐந்து பணியாளர்களை உள்ளடக்கிய மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுவானது சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபடுவதுடன் வாகனங்களுக்கு கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படிங்க: வலையில் சிக்கிய கடற்பசுவை மீண்டும் கடலில் விட்ட மீனவர்கள் - வீடியோவை பகிர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சுந்தர்ராஜன்