தமிழ்நாட்டில் போலி குடும்ப அட்டைகளை ஒழிக்கும் வகையில் ஸ்மார்ட் கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. அடுத்தகட்டமாக தற்போது பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
சோதனை முறையில் ஒரு சில மாவட்டங்களில் பயோமெட்ரிக் முறை அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் குமரி மாவட்டத்தில் வரும் ஒன்றாம் தேதிமுதல் பயோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட உள்ளது.
இன்றுமுதல் பெரும்பாலான நியாயவிலைக் கடைகளில் இதற்கான வெள்ளோட்டம் நடக்கிறது.
குமரி மாவட்டத்தில்,
- கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 556 நியாயவிலைக் கடைகள்,
- தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் மூலமாக 134 நியாயவிலைக் கடைகள்,
- மீனவர் சங்கங்களின் மூலமாக 39 நியாயவிலைக் கடைகள்,
- கதர் கிராம தொழில் வாரியம் மூலமாக இரண்டு நியாயவிலைக் கடைகள்,
- மகளிர் சுய உதவிக்குழு மூலமாக மூன்று நியாயவிலைக் கடைகள்,
- பனைவெல்லம் கூட்டுறவு சங்கம் மூலமாக ஐந்து நியாயவிலைக் கடைகள்
செயல்படுகின்றன. இந்த நியாயவிலைக் கடைகள் மூலம் 5.50 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பெறுகின்றன. இந்தக் குடும்ப அட்டைகள் அனைத்தும் பயோமெட்ரிக் முறைக்கு மாற்றப்படவுள்ளது.
இதற்காக ஏற்கனவே அந்தக் கடைகளுக்கான பயோமெட்ரிக் இயந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் விநியோகம் செய்யப்படுவதால் குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள்தான் வந்து பொருள்களை வாங்க முடியும்.
இதனால் நியாயவிலைக் கடை பொருள்கள் போலியாக வாங்கப்படுவது தவிர்க்க முடியும். மேலும் பொதுமக்களுக்கு வேகமாகப் பொருள்கள் விநியோகம் செய்யவும் முடியும்.