கன்னியாகுமரி மாவட்டம் பாலர்பள்ளி பகுதியைச் சேர்ந்த கலைக்கல்லூரி மாணவர் சேதுபதி நேற்று (செப்.6) இரவு பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் சுதிஷ் என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் அழகியமண்டபம் பகுதியில் உள்ள உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றுள்ளார்.
அங்கு சாப்பிட்டுவிட்டு இருவரும் மீண்டும் அழகியமண்டபத்திலிருந்து பாலர்பள்ளி நோக்கி வந்துகொண்டிருந்தனர். அப்போது பிலாங்காலை என்ற பகுதியில் ஆழ்துளை வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மோதியது.
இதில் சேதுபதி, சுதீஷ் ஆகியோர் தூக்கிவீசப்பட்டனர். இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த தக்கலை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடலையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
விசாரணையில், இரவு நேரம் எந்தவித எச்சரிக்கை விளக்கையும் ஒளிரவிடாமல் ஆழ்துளை வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆழ்துளை வாகன ஓட்டுநர் சண்முகம் என்பவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: கார் - இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு!