கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகேயுள்ள காட்டுவிளையிலிருந்து புன்னையடிக்கு செல்லும் ரோட்டின் அருகில் தனியாருக்குச் சொந்தமான கோயில் வளாகத்தில் 5 அடி உயரத்தில் பாரத மாதா சிலை நிறுவப்பட்டது. அந்த சிலைக்கு அப்பகுதியில் இருந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சிலையை அகற்ற வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன் அடிப்படையில் அரசு அனுமதி பெற்று சிலையை திறக்கலாம் எனவும், அதுவரை சிலை மூடி இருக்கட்டும் எனக்கூறி கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன், அரசு அலுவலர்கள் முன்னிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சிலைை துணியால் மூடினர்.
இந்நிலையில், குமரி மாவட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்து அலுவலர்கள் மூடிய சிலையை திறந்தனர். பின்னர் காவலர்கள், அலுவலர்கள் மீண்டும் சிலையை மூடி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாஜகவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாரத மாதா சிலையை திறக்க வேண்டும் என்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
அப்போது டிஎஸ்பி உத்தரவின் பேரில் தென்தாமரைகுளம் காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜசேகர் தலைமையிலான காவலர்கள், தர்ணாவில் ஈடுபட்ட 37 பேரை கைது செய்தனர். இதை கண்டித்து மாவட்டத்தின் பல பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்நிலையில், மூடப்பட்ட பாரத மாதா சிலையை திறக்க தமிழ்நாடு அரசு நேற்று (மே 24) உத்தரவிட்டது. அதனடிப்படையில் இன்று குமரி மாவட்ட பாஜக தலைவர் தர்மராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் முன்னிலையில் அந்த சிலை மீண்டும் திறக்கப்பட்டது. பின்னர், அந்த சிலைக்கு பாஜகவினர் பாலாபிஷேகம், மலர் அபிஷேகம் செய்தனர்.
இதையும் படிங்க: கபசுரக் குடிநீர் பெரிதும் உதவியாய் இருந்தது: கரோனாவில் இருந்து மீண்ட காவல் ஆய்வாளர் கருத்து!