முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியிலுள்ள பிரசித்திபெற்ற பகவதி அம்மன் கோயிலில் நவராத்திரி திருவிழா, கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது. இத்திருவிழாவையொட்டி அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடு, அன்னதானம், வாகன பவனி, நாதஸ்வர கச்சேரி, பக்தி சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிலையில் இன்று அக்டோபர் எட்டாம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரிவேட்டை விழா நடைபெற்றது. இதையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12 மணிக்கு அம்மன், எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பரிவேட்டைக்காக மகாதானபுரம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து அம்மன் காரியக்கார மடத்துக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து வெள்ளிப் பல்லக்கில் கன்னியாகுமரி நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர், இரவு பத்து மணிக்கு அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக வருடத்திற்கு ஐந்து விசேஷ நாட்களில் மட்டும் திறக்கப்படும், கிழக்கு வாசல் திறக்கப்பட்டு அம்மனை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
மேலும், இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: