கன்னியாகுமரி: நாகர்கோவிலில் கத்தோலிக்க சிரியன் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஏராளமானோர் தங்களது நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், கரோனா தொற்று இரண்டாம் அலை பரவல் காரணமாக தமிழ்நாடு அரசால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அடகு வைத்த நகைக்கு பணத்தை செலுத்த முடியாத நிலை சிலருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது வங்கி நிர்வாகம் வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு ’உங்கள் நகைகளை ஏலம் விடப் போகிறோம்’ என மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் சென்று கேட்கும்போது மிரட்டல் தொனியில் பேசுவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். எனவே, தமிழ்நாடு அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி, இதுபோன்ற வங்கிகள் அனுமதி பெற்றுதான் செயல்படுகிறதா? என்று ஆய்வு செய்வதோடு நகைகளை ஏலம் விடப் போவதாக மிரட்டும் வங்கி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!