சபரிமலையில் நடைபெறும் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் 1ஆம் தேதி விரதமிருந்து மாலை அணிந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். நவம்பர் 16-ஆம் தேதியான இன்று கார்த்திகை மாதம் தொடங்கியதையொட்டி ஐயப்ப பக்தர்கள் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வந்து திரிவேணி சங்கம கடலில் புனித நீராடினர்.
அதன் பின்னர் அவர்கள் நீலம், கருப்பு போன்ற நிறங்களிலான உடையணிந்து கடற்கரையில் அமைந்துள்ள விநாயகர் கோயில், பகவதியம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.
கன்னிசாமிகளுக்கு அனுபவம் வாய்ந்த குருசாமிகள் மாலை அணிவித்தனர். மாலை அணிவிக்கும்போது ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற பக்தி கோஷத்தைப் பக்தர்கள் எழுப்பினர். வழக்கமாக கார்த்திகை ஒன்றாம் தேதியே ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரதத்தை தொடங்கும் நிலையில், கரோனா பாதிப்பு எதிரொலி காரணமாக மிக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்கு வந்து மாலை அணிந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தபாலில் வரும் சபரிமலை பிரசாதம்.. ஆன்லைன் புக்கிங் தொடக்கம்!