கன்னியாகுமரி மாவட்ட மக்களிடையே அய்யா வைகுண்ட சுவாமி வழிபாடு தனித்துவமாக இருந்து வருகிறது. இந்த வழிபாட்டிற்கு தெய்வ உருவங்கள் ஏதுவும் கிடையாது. கோயில் கருவறையில் கண்ணாடியும் பிரம்பும் மட்டும் இருக்கும். மாவட்டத்தின் பெரும் பகுதி மக்கள் இதே வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்.
உலகமெங்கும் உள்ள அய்யாவழி மக்களுக்கு தலைமை பதியாக சுவாமிதோப்பு பதி விளங்குகிறது. இதுதவிர சிறு பதிகள், நிழல் தாங்கல்கள் பல உள்ளன. அதில் அஞ்சுகிராமம் அடுத்த ரஸ்தா காடு பகுதியில் இருக்கும் காயா வேம்பு பதி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த தலத்தின் வரலாறு மிகவும் விசித்திரமானது. இங்கு பக்தர்களிடையே அதிசயத்தை ஏற்படுத்தும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
குறிப்பாக இங்கு அமைந்துள்ள வேப்ப மரத்தில் பூக்கள் பூக்கும், ஆனால் காய்க்காது. இங்குள்ள மரத்தின் விரகை எடுத்து கோயில் வளாகத்தில் வைத்து சமைத்தால் உணவு கசக்காது. ஆனால் அதே விறகை வெளியே எடுத்துச் சென்று சமைத்தால் உணவு கசக்கும். இரவு நேரத்தில் மரங்களில் பறவைகள் தங்காது உள்ளிட்ட ஏராளமான அதிசயங்கள் காணமுடிகின்றன.
இதுகுறித்து காயா வேம்பு பதியின் தலைவர் ராமசாமி கூறியதாவது, "கன்னியாகுமரி அடுத்த அஞ்சு கிராமம் அருகில் ரஸ்தா காடு என்னும் இடத்தில் சுமார் 400 வருடங்களுக்கு மேல் உலகப்புகழ் பெற்ற காயா வேம்பு பதி உள்ளது. அய்யா விஞ்சை பெற்று திருச்செந்தூரில் இருந்து வரும்போது இப்பகுதியிலுள்ள வேப்பமரத்தடியில் இளைப்பாறும் பொருட்டு அமர்ந்து இருந்தார்.
அப்போது அம்மரத்தில் இருந்த பழங்களை உண்டு மகிழ்ந்த பறவைகள் எச்சமிட்டன. இந்த எச்சம் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்த அய்யாவின் மீது விழுந்தது. உடனே அய்யா ஒரு கட்டளை பிறப்பித்தார். அன்றிலிருந்து இங்குள்ள வேப்ப மரத்தில் பூ பூக்கும் ஆனால் காய்க்காது. பகல் நேரத்தில் பறவைகள் மரத்தின் மீது உட்காரும். ஆனால் கூடுகட்டி இரவில் தங்காது. மரத்திலிருந்து பறவைகள் எச்சம் போடாது.
வேப்பமரம் அய்யா கோயிலுக்கு சொந்தமான நிலத்தை விட்டு பக்கத்து நிலத்தில் படராது. அப்படி படர்ந்தால் அது தானாகவே ஒடிந்து விழுந்து விடும். இந்த வேப்ப மரத்தின் விறகுகளில் அய்யாவிற்கு அன்னம், பால் சமைக்கலாம், அது கசக்காது. ஆனால் மரத்தின் விறகை வெளியே எடுத்துச் சென்று சமைத்தால் உணவு கசப்பாக இருக்கும். அய்யா பாடிய அகிலத்தில், காயா வேம்பு பதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: சிவன் கோயிலில் சுரங்கப்பாதை - மழைநீர் வடிகாலாக மாற்றம்!