சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதில், வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இங்கு வந்து தங்கும் சுற்றுலாப் பயணிகளுக்கென 150க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இதில், நட்சத்திர தங்கும் விடுதிகளும் அடங்கும். 2008ஆம் ஆண்டு, மும்பையில் தனியார் தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அன்மையில் சுற்றுலாப் பயணிகள் என்ற போர்வையில் வெளிநாட்டிலிருந்து கன்னியாகுமரிக்கு வந்திருந்த சிலர் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புகைப்படம் எடுத்துவிட்டு தப்பிச் சென்றனர். அதையடுத்து, காவல் துறையினர் அந்த நபர்கள் தங்கியிருந்த விடுதிகளைச் சோதனை செய்த பிறகும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் விழிப்புணர்வு அடையும் வண்ணம் கன்னியாகுமரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இதில் விடுதி உரிமையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், டிஎஸ்பி பாஸ்கரன் பேசுகையில், "கன்னியாகுமரிக்கு மிகவும் அருகில் இருக்கும் கூடங்குளம், ஐஎஸ்ஆர்ஓ மிக முக்கியமான பகுதிகளை சுற்றுலாப் பயணிகளின் போர்வையில் அந்நியர்கள் வேவு பார்க்கிறார்கள். இதனால் விடுதிகளில் கண்டிப்பாக சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். தங்கும் வெளிநாட்டினர் குறித்த அனைத்து விவரங்களையும் காவல் துறையினர் சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்காக வசதிகளை விடுதிகள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.