கன்னியாகுமரி: அய்யா வைகுண்டரின் தலைமைப்பதி சாமித்தோப்பில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி, தை ஆகிய 3 திருவிழாக்கள் 11 நாட்கள் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணித்திருவிழா கடந்த 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் தினசரி காலை முதல் மாலை வரை பணிவிடை, மதியம் உச்சிப் படிப்பும், கலிவேட்டையாடும் நிகழ்ச்சியும், இரவு வாகனப்பவனியும் நடைபெற்றது. கோயில் தலைமை குருக்கள் பாலா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளிலும் பெரும் திரளான அய்யா வழி பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று நண்பகலில் ஆவணித்தேர் திருவிழா நடைபெற்றது.
இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரினை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் அய்யாவுக்கு சுருள் ஏய்ப்பு நிகழ்ச்சிக்காக வாழைத்தார்கள், வெற்றிலை, பூக்கள், தேங்காய் உள்ளிட்ட ஏராளமான பொருட்களைக் கொண்டு வந்து தேரில் கொடுத்தனர்.
இதையும் படிங்க:40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட விநாயகர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு