கன்னியாகுமரி: சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமாரின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான விஜய்வசந்த் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "டெல்லியில் குளிரில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு இழிவுப்படுத்துகிறது. விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டியவைகளை செய்யாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகளை மத்திய அரசு நடுரோட்டில் விட்டுள்ளது.
இந்த செயலை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதனால் மேலும் போராட்டம் தீவிரம் அடையும். விவசாயிகளை மத்திய அரசு வஞ்சிக்கிறது. வேளாண் மசோதாக்களை அமல்படுத்தும் முன்பே விவசாயிகள் சாலைக்கு வந்துவிட்டனர். அப்படியானால் இந்த சட்டங்களை அமல்படுத்தினால் விவசாயிகள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து விஜய் வசந்த் கருத்து:
அதிமுக-பாஜக கூட்டணி குறித்து தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்த பிறகு முடிவுசெய்து கொள்ளலாம். ஆனால் எங்கள் கூட்டணி மிகவும் உறுதியான கூட்டணியாக உள்ளது. அவர்கள் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என்றால், அதிமுக அரசு பாஜகவின் கீழ்தான் செயல்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது.
பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு பின்னடைவாக தான் இருக்கும் என்றார்.
இதையும் படிங்க: இஸ்லாமியர்களின் சிறுபான்மையினர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்" - பாஜக எம்பி சர்ச்சைக் கருத்து