கன்னியாகுமரி மாவட்டம் தர்மபுரம் ஊராட்சியில் குடிநீர் இணைப்பு வழங்கப்படாத அனைத்து வீடுகளுக்கும் மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஊராட்சி தலைவர், செயலாளர் ஆகியோர் குடிநீர் இணைப்பு வழங்குவதாக பொது மக்களிடமிருந்து ரசீது இல்லாமல் சட்டவிரோதமாக பல்லாயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளனர்.
அதன்படி குட் மின் இணைப்பு வழங்குவதாக அப்பகுதி மக்களிடமிருந்து தலா ரூ.6,500 முதல் 12 ஆயிரம் வரை பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அலுவலர்களிடம் புகார் தெரிவித்த பின்னர் சிலருக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. ஆனால் பலருக்கு தற்போது வரை பணம் திரும்பி வழங்கவில்லை. எனவே, குடிநீர் இணைப்பு வழங்குவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத அலுவலர்களை கண்டித்தும் திமுக, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திமுக எம்எல்ஏ ஆஸ்டின் தலைமை தாங்கினார். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு குடிநீர் இணைப்பு மோசடியை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: 'ஒரு தண்ணீர் தொட்டி ரூ.7.70 லட்சமா?' - மீம்ஸ் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்