கன்னியாகுமரி: சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர் அய்யா வைகுண்டர். இவர் அவதரித்த நாளான மாசி மாதம் 20ஆம் தேதி அய்யா வைகுண்டர் அவதார தினவிழாவாக 'அய்யாவழி' சமூகத்தினர் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.
அதன்படி அய்யா வைகுண்டரின் 189 ஆவது அவதார தினவிழா இன்று கொண்டாடப்பட்டது, இதனையொட்டி நேற்று நெல்லை, துாத்துக்குடி, உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாகர்கோவில் வந்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று காலை நாகர்கோவில் நாகராஜாகோவில் திடலில் இருந்து சுவாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமை பதி நோக்கி அய்யா அவதார தின விழா பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணியின் முன்பாக அய்யாவின் 'அகிலதிரட்டு' புத்தகத்தை, காவிக்கொடியுடன் பக்தர்கள் பூப்பல்லக்கில் எடுத்து சென்றனர். கோட்டார், இடலாக்குடி, சுசீந்திரம், தென்தாமரைகுளம் வழியாக சென்ற ஊர்வலம் பின்னர் சுவாமித்தோப்புக்கு சென்றடைகிறது.
இந்தப் பேரணியில் முத்துக்குடைகள், செண்டை உள்ளிட்ட பலதரப்பட்ட மேளதாளங்கள் இடம்பெற்று இருந்தன. பேரணியில் நடைபெற்ற குழந்தைகளின் கோலாட்டம் வழிநெடுகிலும் கூடி இருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அய்யா வைகுண்டர் அவதார தின பேரணியை முன்னிட்டு நாகர்கோவில் முதல் சுவாமிதோப்பு வரையிலான போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இத் தினத்தையொட்டி குமரி மாவடத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கபட்டு உள்ளது.