கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது காதலுடன் வீட்டை விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின், அந்த இளைஞரிடமிருந்து சிறுமியை மீட்ட காவல் துறையினர், அச்சிறுமியை மாவட்டக் குழந்தைகள்நல பாதுகாப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அச்சிறுமி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் தன்னைக் கடந்த இரண்டு வருடங்களாகப் பாலியல் தொல்லை கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் அவருடன் வந்த பலரும் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அச்சிறுமி கூறியுள்ளார்.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் நாஞ்சில் முருகேசன் மீது நாகர்கோவில் மகளிர் காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள நாஞ்சில் முருகேசனைத் தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். இதனிடையே, நேற்றிரவே நாஞ்சில் முருகேசனை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிமுக தலைமை நீக்கியுள்ளது. இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின் அமமுகவில் சேர்ந்து, பின் மீண்டும் அதிமுகவில் இணைந்திருந்தார்.
இச்சூழலில், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இடலாக்குடியைச் சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43), கோட்டார் பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் (28), சிறுமியின் தாயார் ஆகிய நான்கு பேர் இன்று இரவு கைதுசெய்யப்பட்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு தனது தாயார் நாஞ்சில் முருகேசனிடம் அழைத்துச் சென்றபோது, அவர் தன்னைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவரது தாயாரைக் காவல் துறையினர் கைதுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ராஜஸ்தான்: துப்பாக்கி முனையில் பெண் பாலியல் வன்புணர்வு!