கன்னியாகுமரி: நாகர்கோவிலில் வசித்து வருபவர் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன். இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்கு முன்பு வரை கட்டட தொழிலாளியாகவும், நில விற்பனை இடைத்தரகராகவும் இருந்தார். இவர் எம்எல்ஏ ஆன பிறகு சொத்து மதிப்புகள் உயர்ந்ததாக தெரிகிறது. இவர் பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கடந்த 2020 ஆம் ஆண்டு பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பின்பு அடிதடி புகார்கள் வந்ததாக தெரிகிறது. தற்போது நிலம் விற்பனையில் 33 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில், நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார் என்பவர் கடந்த 2021 டிசம்பர் மாதம் நாஞ்சில் முருகேசனின் மனைவி தங்க தேவிகா பெயரில் புத்தேரி பகுதியில் உள்ள நிலத்தை 75 லட்சம் ரூபாய்க்கு பேசி முடித்தார்.
அந்த நிலம் நாகர்கோவில் ஜோஸ்வா தெருவை சேர்ந்த பினோ தேவகுமார் என்பவரது பெயருக்கு தங்க தேவிகா பவர் எழுதி கொடுத்து இருக்கிறார். அதனடிப்படையில் செந்தில்குமார், பினோ தேவகுமார், நாஞ்சில் முருகேசன் மகள் ஶ்ரீலிஜா ஆகியோரிடம் 33 லட்சம் ரூபாய் இரண்டு தவணையாக வங்கி மூலம் கொடுத்தார்.
மீதி தொகையை செலுத்திட தயாராக இருந்தும் இவர்கள் நிலத்தை எழுதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே அந்த நிலத்தை செந்தில் குமாருக்கு கொடுக்காமல், பினோ தேவகுமார் தனது பெயருக்கு மாற்றம் செய்தது தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட செந்தில்குமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதை விசாரணை செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், பண மோசடி செய்ததாக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன், அவரது மனைவி தங்க தேவிகா, மகள் ஸ்ரீலிஜா (நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர்) மற்றும் நாகர்கோவில் ஜோஸ்வா தெருவை சேர்ந்த பினோ தேவகுமார் ஆகிய நான்கு பேர் மீது மோசடி, கொலை மிரட்டல் (420, 506(1)) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: காவிரி ஆற்றில் நாட்டின மீன் வகைகள் பெருக்க நடவடிக்கை - கரூர் ஆட்சியர் தகவல்