வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (மே.25) பிற்பகல் முதல் சூறைக்காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சுமார் 11 மணி நேரத்திற்கு மேலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் குளங்கள் உடைந்தும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டும் உள்ளது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.
இந்நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள புத்தேரி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு நீர் வெளியேறியது. இதனால் இந்தக் குளத்தைச் சுற்றி விவசாயம் செய்யப்பட்டிருந்த சுமார் 1,400 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. நாகர்கோவிலில் இருந்து அருமநல்லூர், நாகர்கோவிலில் இருந்து தடிக்காரகோணம் செல்லும் முக்கிய சாலையில், பழைய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.