குமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு அருகே ஞாலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் - பிரசன்னகுமாரி தம்பதிக்கு ஒரு மகனும், சந்தியா என்ற மகளும் இருந்தனர். இதில், சந்தியாவை தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இதையடுத்து சந்தியாவும், அவரது கணவரும் சென்னையில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி சந்தியாவை அவரது கணவரான பாலகிருஷ்ணன் துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்து, உடல் பாகங்களைப் பல்வேறு குப்பைத் தொட்டிகளில் வீசினார். இதையடுத்து, அவரை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மனைவியின் நடத்தையில் சந்தேகித்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.
கணவர் பாலகிருஷ்ணன் கொடுத்த தகவலின் பேரில் மாநகரின் பல்வேறு பகுதியில் வீசப்பட்ட உடல்பாகங்களை காவல்துறையினர் தேடினர். அனைத்து பாகங்களும் கிடைத்த நிலையில், தலை மட்டும் இன்னமும் கிடைக்கவில்லை. இதனால், தலையை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், இதுவரை கிடைக்காததால் தேடும் பணியை காவல்துறையினர் நிறுத்திக் கொண்டனர். இந்நிலையில், சந்தியாவின் கிடைத்த உடல் பாகங்களை மூட்டையாகக் கட்டி பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனைத்தொடர்ந்து, இன்று அவரது உடல் சொந்த ஊரான குமரி மாவட்டம் ஞாலம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.