சென்னை: கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் சென்னை புறநகர் ரயில் இன்று இயங்காது என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தாம்பரம் பணிமனையில் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகளுக்குக்காக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், தாம்பரம் முதல் கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிமுதல் மாலை 5 வரை, இந்த ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை மக்களின் தினசரி பயணங்களில் முக்கிய இடம் வகிப்பது புறநகர் மின்சார ரயில்கள் தான். சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசலில் சிக்காமல், குறைந்த செலவில் போகவேண்டிய தூரத்தை வேகமாக அடைந்துவிடலாம் என்பதால், மக்கள் பெரிதும் மின்சார ரயில்களைப் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, இன்று ரயில்கள் ரத்து செய்யப்படுவதால், பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
இதனை சரிசெய்ய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், தாம்பரம் முதல் கடற்கரை மற்றும் கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதை செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை உறுதி செய்துள்ளது.
கடற்கரை முதல் தாம்பரம் புறநகர் ரயில் நிறுத்தங்கள் எவை?
சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் புறநகர் ரயில் 50 நிமிடங்களுக்குள்ளாக தாம்பரம் சென்றடையும். அதன்படி, இந்த ரயிலில் நிறுத்தங்கள் எவை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
- சென்னை கடற்கரை (MSB)
- சென்னை கோட்டை (MSF)
- சென்னை பூங்கா (MPK)
- சென்னை எழும்பூர் (MS)
- சென்னை சேத்துப்பட்டு (MSC)
- நுங்கம்பாக்கம் (NBK)
- கோடம்பாக்கம் (MKK)
- மாம்பலம் (MBM)
- சைதாப்பேட்டை (SP)
- கிண்டி (GDY)
- செய்ன்ட் தாமஸ் மவுண்ட் (STM)
- பழவந்தாங்கல் (PZA)
- மீனம்பாக்கம் (MN)
- திரிசூலம் (TLM)
- பல்லாவரம் (PV)
- குரோம்பேட்டை (CMP)
- தாம்பரம் சேனிட்டோரியம் (TBMS)
- தாம்பரம் (TBM)
இதையும் படிங்க |
இதேபோல, தாம்பரத்தில் இருந்து தொடங்கும் புறநகர் ரயில், 17 நிறுத்தங்களைக் கடந்து கடற்கரை ரயில் நிலையத்தை வந்தடையும். அரசு அறிவித்துள்ள 50 கூடுதல் பேருந்துகள் இந்த வழித்தங்களில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள, பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் போக்குவரத்து துறை அலுவலர்களை மக்கள் அணுகினால் போதும். உங்களுக்குத் தேவையான தகவல்களையும், பேருந்து அட்டவணையையும் போக்குவரத்துத் துறை ஊழியர்களோ அல்லது அலுவலர்களோ வழங்குவார்கள்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.