கன்னியாகுமரி மாவட்டம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த சுடலைமணியின் மகள் ஐஸ்வர்யா (20). இவர் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள நைட்டி கம்பெனி ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு நேற்று முன்தினம் (செப்.,13) ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த வேலப்பன் மகன் இசக்கியப்பனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில், ஐஸ்வர்யா நேற்று மாலை (செப்.,14) திடீரென காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஐஸ்வர்யாவின் பெற்றோர் பல இடங்களில் தேடியுள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி காவல் நிலையத்தில் சுடலைமணி புகாரளித்தார். இந்த புகார் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து காணாமல் போன ஐஸ்வர்யாவை தேடி வருகின்றனர்.
இதனிடையே, ஐஸ்வர்யாவும் இருக்கன்துறை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமாரும் (24) காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒருவேளை காதல் விவகாரத்தில் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறி இருக்கக் கூடுமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:காணாமல் போனதாக புகாரளிக்கப்பட்ட பெண் சடலமாக மீட்பு - காவல்துறை விசாரணை!