கன்னியாகுமரி: தங்கள் முன்னோர்களை நினைத்து ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவசை ஆகிய இரண்டு நாட்களில் நீர்நிலைகளுக்குச் சென்று அரிசி, எள், பூ உள்ளிட்ட பொருட்களை கொண்டு தர்ப்பணம் செய்து புனித நீராடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ஆடி அமாவசையை முன்னிட்டு, சரஸ்வதி தீர்த்தம், விநாயகர் தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி கடற்கரையில், அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கூடியுள்ளனர்.
மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து மந்திரங்கள் ஒலிக்க, எள், பச்சரிசி, தர்ப்பை மற்றும் பூக்களினால் பலிகர்ம பூஜை செய்து புனித நீராடி வருகின்றனர். இந்த நாட்களில் புனித நீர் நிலைகளில் பலிகர்ம பூஜை செய்வதால், மறைந்த தங்களது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைவதுடன், தங்களது குடும்பம் எல்லா வளங்களும் பெற்று சிறப்படையும் என்ற மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் பலிகர்ம பூஜை செய்த மக்கள், அங்குள்ள குமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் அனுமதி மறுக்கபட்டதால், இந்த ஆண்டு தர்ப்பணம் செய்து புனித நீராட மக்கள் கூட்டம் வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசை: மதுரை மல்லிகை கிலோ ரூ.900க்கு விற்பனை!