கன்னியாகுமரி: நாகர்கோவிலைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர், தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்ப்பதாகவும், இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தனியார் பள்ளியில் இவர் வேலை பார்த்து வந்தபோது, அதே பள்ளியில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவரிடம் நெருங்கி பழகியதாகவும், பின்னர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், மாணவியின் பெற்றோர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில், உடற்கல்வி ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.
அதன் பிறகு அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், போலீசாருக்கு மேலும் பல அதிர்ச்சிகள் காத்திருந்துள்ளது. அதாவது, அந்த விசாரணையில், அவர் இதேபோல திட்டமிட்டு பல மாணவிகள் மற்றும் ஆசியர்களிடமும் பாலியல் வன்முறையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
அதன் பிறகு அவரது செல்போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்துள்ளனர். அதனைக் கண்ட போலீசாருக்கு மேலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அந்த செல்போனில் ஏராளமாக பெண்களின் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இருந்துள்ளது. அதுமட்டுமின்றி, பல பெண்களிடம் ஆபாசமாக சேட் செய்த உரையாலும் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த தொடர் விசாரணையில், அவர் பல தனியார் பள்ளிகளில் பணியாற்றியதாகவும், அவ்வாறு பணியாற்றிய பள்ளிகள் சிறப்பு பயிற்சிக்கு செல்லும் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவற்றில் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்டோரிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொள்வதையே வழக்கமாக கொண்டு வந்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேலும் அவர்களது செல்போன் எண்ணை வாங்கி, அதன் மூலம் அடிக்கடி ஆசை வார்த்தைகள் பேசி, தனது வலையில் விழ வைத்ததுள்ளார். அதிலும் குறிப்பாக வெளிநாட்டில் கணவர் வேலை பார்க்கும் பெண்களை குறி வைத்து, உடற்கல்வி ஆசிரியர் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அவரிடம் சிக்கிய மாணவிகள் மட்டுமின்றி, மாணவிகளின் தாயாரிடமும் தொடர்பு வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தன்னிடம் தொடர்பில் இருந்த பெண்களிடம் வீடியோ காலில் பேசும்போது, அதனை ரகசியமாக பதிவு செய்யும் வேலையையும் பார்த்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், அவரது செல்போனில் உள்ள பெண்களின் போட்டோக்களை வைத்து விசாரணை நடத்தி உள்ளனர்.
அப்போது, அடையாளம் காணப்பட்ட ஒரு பெண்ணை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில், அவர் ஒரு ஆசிரியர் என்பதும், அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் அந்த ஆசிரியை, உடற்கல்வி ஆசிரியரிடம் சக ஆசிரியர் என்ற முறையில் பழகியதாகவும், ஆனால் அடிக்கடி போனில் பேசிய அவர், ஆசை வார்த்தை கூறி தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட தொடர்பை துண்டித்து விட்டதாகவும், ஆசிரியை கண்ணீர் மல்க அழுததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல பல பெண்கள் அவரது வலையில் சிக்கியுள்ளதாகவும், ஆனால் அவர்கள் பெயரை A, X என புனைப் பெயர்களில் தனது செல்போனில் ஆசிரியர் பதிவு செய்து வைத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவரது செல்போனில் உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்களிடம் புகார்களைப் பெற போலீசார் திட்டமிட்டு, அதனடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் அவர் தனது செல்போனில் இருந்த பல வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை அழித்து இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து, அதனை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் ரெக்கவரி சாப்ட்வேர் பயன்படுத்தி மீட்கவும் முடிவு செய்துள்ளனர். தற்பொது உடற்கல்வி ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை விவகாரம்; டிஜிபி ராஜேஷ்தாஸ் வழக்கு தள்ளுபடி!