தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சித்த மருத்துவப் பிரிவு உதவி மருத்துவராக பணிபுரிந்து வருபவர் டாக்டர் அருண்குமார். இவர் பணிக்கு வந்தவுடனே, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், கரோனா சிகிச்சை மையத்தில் உள்ள நோயாளிகள் ஆகிய அனைவருக்கும் கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் என வழங்கி கரோனாவைக் கட்டுப்படுத்த தேவையான விழிப்புணர்வுகளையும், இயற்கை உணவு முறைகளையும் கூறி அறிவுரை வழங்கி வருகிறார்.
தற்போது பட்டுக்கோட்டை பகுதியில் அதிகமாக கரோனா தொற்று உருவாகி வருகிறது. இதனால் மனவேதனையடைந்த அருண்குமார் தனது பணி நேரம் முடிவடைந்த பிறகு கபசுரக் குடிநீர் தயார் செய்து வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு வழங்கி, கரோனாவிலிருந்து காத்துக் கொள்வது எப்படி என்பது பற்றியும், எவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
அரசு பணியில் இருக்கும் ஒரு சில அரசு அலுவலர்கள் பணியை முழுமையாக செய்யாமல் மெத்தனம் காட்டிவரும் நிலையில், இவர் தனது பணி நேரம் முடிந்த பிறகும் சமூகப் பணி ஆற்றி வருவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ரெம்டெசிவிர் மருந்தை வாங்க அலைமோதும் மக்கள் கூட்டம்... விற்பனை தொடக்கம்!