கன்னியாகுமரி: நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலமுருகன் (35). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பாலன் குமரி மாவட்டம் சுசீந்திரம் ஆஞ்சநேயர் நகர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பர்னிச்சர் கடையில் இடலாக்குடி நெடுந்தெருவைச் சேர்ந்த கணேஷ் (39) என்பவரும் வேலை பார்த்துள்ளார்.
இவர்கள் இருவரும் வேலை முடிந்து இரவு பர்னிச்சர் கடையில் தங்குவது வழக்கம். இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (ஜூலை 13) இரவு பாலன், கணேஷ் ஆகிய இருவரும் வழக்கம்போல் பர்னிச்சர் கடையில் தங்கி இருந்தனர். அப்போது இருவரும் மது அருந்தி உள்ளனர். கணேசின் நண்பர் பட்டாரியர் நெடுந்தெருவைச் சேர்ந்த ஜெகதீசனும் அங்கு வந்துள்ளார். 3 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது பர்னிச்சர் கடையில் வேலை செய்வது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பாலன், தான் அதிக வேலை செய்வதாகவும், கணேஷ் சோம்பேறியாக உள்ளதாகவும் கூறி உள்ளதாகவும் தெரிகிறது. இது கணேசுக்கும், அவரது நண்பர் ஜெகதீசுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பாலன், திடீரென ஜெகதீசை சரமாரியாக தாக்கி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ் மற்றும் ஜெகதீஷ் சேர்ந்து பாலனை அங்கிருந்த கட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த பாலன், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து காவல் ஆய்வாளர் சுப்பையா தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த பாலனையும், படுகாயத்துடன் நின்று கொண்டிருந்த ஜெகதீசையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாலன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜெகதீஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கபட்டு வருகிறது. இது குறித்து சுசீந்திரம் போலீசார் ஜெகதீஷ், கணேஷ் மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட கணேசிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட பாலன் உடல் உடற்கூராய்விற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பின்னர், பாலன் கொலை செய்யப்பட்ட தகவல் தச்சநல்லூரில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மது போதையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் நண்பர்களே நண்பனை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் சுசீந்திரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக சம்பவம் நடந்த உடன் உயிருக்கு போராடி கொண்டிருந்த பாலனை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்து உள்ளனர்.
ஆனால் அரசு மருத்துவமனையில் 3 மணிநேரம் சிகிச்சை அளிக்காமல் இருந்ததாகவும், அதனால்தான் பாலன் உயிரிழந்தார் எனவும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சென்னையில் மந்திரவாதி கத்தியால் குத்தி கொலை.. நடந்தது என்ன?