குமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஐயப்பன் (42). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள முத்து நீயூரோ என்ற தனியார் மருத்துவமனையில் சலவைத் தொழில் செய்துவந்தார்.
இந்நிலையில் இவர் நேற்று (அக். 14) மாலை மருத்துவமனையில் உள்ள மூன்றாவது மாடிக்குச் சென்றார். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து அவர் கீழே விழுந்தார். இந்தச் சத்தம் கேட்டு மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சென்று பார்த்தபோது அவர் பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு உள்ளே தூக்கிவந்து சிகிச்சை அளிக்க முயற்சித்தனர். அப்போது மருத்துவர்கள் ஐயப்பனைப் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது.
இது தொடர்பாக இரணியல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் சம்பவயிடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரணியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் ஆய்வு செய்துவருகின்றனர். இறந்துபோன ஐயப்பனுக்கு வசந்தி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இதையும் படிங்க: சொத்துத் தகராறில் தலைமைக் காவலரின் மனைவிக்கு கத்திக்குத்து