கன்னியாகுமரி: குளச்சல் அருகே வாணியக்குடியை சேர்ந்த லூகாஸ் என்பவருக்குச் சொந்தமான மகிமை மாதா என்ற விசைப்படகில், கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து ஆழ்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். அரபி கடலின் ஆழ்கடலில் 15 நாட்கள் 20 நாட்கள் தங்கி மீன்பிடி தொழில் செய்யும் இந்த மீனவர்கள் சரியாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் 25 நாட்டிகல் தொலைவில் விசைப்படகு பாறையில் மோதி விபத்து ஏற்பட்டு, விசைப்படகு மெல்ல மெல்ல கடலில் மூழ்கி வருவதாக தகவல் வந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 15 மீனவர்களும் விசைப் படகில் இருந்த நாட்டு படகை பயன்படுத்தி உயிர் தப்பி உள்ளனர். இருந்தாலும் கரைசேர முடியாமலும் மூழ்கும் படகை மீட்க முடியாமலும், ஆழ்கடலில் தவித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடலோர காவல் குழும போலீசாருக்கும், மீன்வளத் துறைக்கும் தகவல் கொடுத்தும் கூட எந்தவித நடவடிக்கையும் அவர்கள் மேற்கொள்ளாததால் குளச்சலில் அருகே வாணியக்குடி கடற்கரை கிராமத்தில் உள்ள மீனவர்கள் உணவு, குடிநீருடன் குளச்சல் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகுகளில் விபத்து ஏற்பட்ட ஆழ் கடல் பகுதிக்கு விரைந்து சென்று மீட்டு உள்ளனர்.
மேலும், 15 மீனவர்கள் உயிரோடு இருந்தாலும் குடிக்க தண்ணீர் இல்லாமல், உணவு இல்லாமல் கண் முன்னே அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கி வருவதைப் பார்த்து கண்கலங்கி நிற்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆழ்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை காப்பாற்ற ஒரு ஹெலிகாப்டர் வசதி நீண்ட காலமாக மத்திய, மாநில அரசுகளிடம் கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.
அதேபோல, கேரள அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள மீனவர்களை காப்பாற்றுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ள கடல் ஆம்புலன்ஸ் என்ற புதிய வசதியையும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்து நிறைவேற்றவில்லை. இதுபோன்ற வசதிகள் இருந்தால் இந்த மீனவர்களை உடனடியாக காப்பாற்றி கொண்டு வர முடியும் என தெற்காசிய மீனவ கூட்டமைப்பின் பொது செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு