கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றி திரியும் வட மாநில கஞ்சா கும்பல் ஒன்று இரவு நேரங்களில் அப்பகுதி வழியாகச் செல்லும் நபர்களை தாக்கி வழிப்பறி செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், நேற்று முன்தினம் (மார்ச்9) இரவு குளச்சல் மீன்பிடி துறைமுகம் எதிரே உள்ள கடை படிக்கட்டில் யாசகம் பெறும் மாற்று திறனாளி ஒருவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இப்பகுதியினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏ.எஸ்.பி. பிஸ்வேஷ் சாஸ்த்ரி தலைமையிலான காவலர்கள் உயிரிழந்து கிடந்தவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது கைப்பை, இடுப்பு பட்டை பையை சோதனை செய்ததில், அவரது வங்கிக் கணக்கு புத்தகம், மாற்று திறனாளி அடையாள அட்டை இருந்தது. அதனடிப்படையில், அந்த நபர் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த செல்லநாடார் (67) என்பதும் கிணறு தோண்டும் வேலையில் கால் எலும்பு முறிந்து மாற்றுதிறனாளி ஆகி வீட்டில் இருந்த நிலையில் யாரும் சரிவர கவனிக்காததால் கடந்த இரண்டு வருடமாக குளச்சல் மீன்பிடி துறைமுக பகுதியில் யாசகம் பெற்றும் இப்பகுதியில் உள்ள வீட்டார்கள் கொடுக்கும் உணவை உண்டும் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
மது பழக்கம் இல்லாத செல்லநாடார் இரண்டு நாள்களுக்கு ஒருமுறை யாசகம் பெற்ற பணத்தை தெரிந்த நபர்கள் மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தி வந்துள்ளார். இதை கண்காணித்த வட மாநில கஞ்சா கும்பல் அடிக்கடி செல்ல நாடாரை தாக்கி பணத்தை பறித்து சென்றுள்ளனர். இந்நிலையில், சில்லரை காசுக்காக கஞ்சா கும்பல் யாசகம் பெறும் மாற்று திறனாளியின் தலையை சிதைத்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான சிறுமியை நிர்வாணமாக்கி தாக்கிய கும்பல்