கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கல்லுதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(50). இவர், தனது வீட்டின் அருகே சிறியளவில் நகை பட்டறை ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், தனது குடும்பத்தினருடன், மூத்த மகளின் வீட்டுச் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று நெல்லை சென்றுள்ளார். பொழுது சாயும் நேரத்தில், வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததைப் பார்த்த, அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணனுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக, நெல்லையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியவர், உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டின் கதவுகளை உடைத்து, அலமாரியில் பாதுகாப்பாக வைத்திருந்த 44 சவரன் நகைகளை, திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களைப் பீதியடையச் செய்துள்ளது.