கன்னியாகுமரி: தமிழ்நாடு - கேரள எல்லைப்பகுதியான கன்னியாகுமரி பாறசாலைப்பகுதியில் குடிபோதையில் ஓட்டுநரால் அதிவேகத்தில் ஓட்டி வரப்பட்ட டிப்பர் லாரி, எதிரே வந்த பைக் மீது மோதி, பைக்கில் இருந்த மூன்று பேர் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் களியக்காவிளை பகுதியைச்சார்ந்த பால்ராஜ் -அஸ்வினி தம்பதியினரின் மூன்று வயது குழந்தையான ரித்திகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பால்ராஜ் மற்றும் அஸ்வினி உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் அஸ்வினி இரண்டாவதாக கர்ப்பம் தரித்திருந்தார். அதற்கான 7ஆவது மாதப்பரிசோதனையை பாறசாலை அரசு மருத்துவமனையில் செய்து முடித்துவிட்டு, களியக்காவிளை நோக்கி திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்து குறித்து பாறசாலை காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், டிப்பர் லாரி ஓட்டுநர் குடிபோதையில் ஓட்டிவந்தது தெரியவந்துள்ளது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தனியார் பள்ளி வாகனம் கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதி விபத்து - 10 குழந்தைகள் காயம்!