கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடந்த ஜந்து மாதங்களாக இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் திருடுபோய் வந்தது. இதனால், தொடர் வாகனத் திருட்டில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து கைது செய்ய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சிலதினங்களுக்கு முன்னர் கோட்டார் காவல் துறையினர் பீச்ரோடு சந்திப்பில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறினர். தீவிர விசாரணைக்கு பின்னர், அவர்கள், மார்த்தாண்டத்தை சேர்ந்த அகஸ்டின் இன்பராஜ் (47), மதுரையைச் சேர்ந்த பிரபாகரன் (36) என்பது தெரிய வந்தது. அவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்கார்பியோ காரில் சென்று, பக்கவாட்டில் பூட்டப்படாத மோட்டார் பைக்குகளைக் குறி வைத்து திருடியுள்ளனர்.
பின்னர் பைக்கை காரில் ஏற்றி ஆள் நடமாட்டம் இல்லாத தோட்டத்திற்கு எடுத்துச் சென்று அவற்றை சேகரித்துள்ளனர். திருடிய பைக்குகளை வெளிமாநிலங்களுக்கு அனுப்பி விற்பனையும் செய்துள்ளனர். பிரபாகரன், அகஸ்டியன் இருவருக்கும் சிறையில் ஒன்றாக இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது. வெளியே வந்தவுடன் இருவரும் திட்டமிட்டு தொடர் வாகன திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், அவர்களிடமிருந்து ஸ்கார்பியோ கார், 10 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, இருவரும் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் மதுரையைச் சேர்ந்த தங்கபாண்டி எனும் பைக் திருடனையும் கைது செய்தனர். தங்கபாண்டியிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அந்நபரை நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை இந்தத் திருட்டு வழக்கில் மொத்தமாக இருபதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக காவல் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: படுக்கையறையிலேயே காளாண் வளர்ப்பு: மஷ்ரூம் லேடியின் வெற்றிக்கதை