கன்னியாகுமரி: பண்டைய காலத்தில் திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் இருந்த பகுதிகளை கைப்பற்ற, டச்சு நாட்டு படைகள் கடல் மார்க்கமாக அதன் தளபதி டிலணாய் தலைமையில் குளச்சலை நோக்கி வந்தனர்.
போரின் ஒரு கட்டத்தில், திருவிதாங்கூர் மன்னர் படைகளிடம் நவீன ரக பீரங்கிகள் எதுவும் இல்லை. ஆனால் டச்சுப் படைகளிடம் துப்பாக்கிகள் இருந்தன. எனவே, திருவிதாங்கூர் படைகளுக்கு அவர்களை எதிர்கொள்ள முடியாத சூழல் நிலவியது.
மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் மதிநுட்பத்தால் போரில் வியூகம் அமைக்கபட்டது. இதன்படி ஏராளமான கட்டை வண்டிகளில் பனை மர தடிகளை வைத்து, பீரங்கிகள்போல் குளச்சல் கடற்கரையில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன.
இதனை கடலில் இருந்து பார்த்த டச்சு நாட்டுப்படைகள், உண்மையான பீரங்கிகள் என நினைத்து மன்னரிடம் சரணடைந்தனர். 1741 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி திருவிதாங்கூர் மன்னர் படைகள் டச்சு படைகளை தனது ராஜதந்திரத்தால் வென்ற 281ஆவது ஆண்டு தினம், குளச்சலில் இன்று கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி வரலாற்று சிறப்பு வாய்ந்த போர் வெற்றி தூணுக்கு, ராணுவ வீரர்கள் மலர் வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர். இந்நிகழ்வில், திருவனந்தபுரம் ராணுவ தள 11ஆவது பட்டாலியன் உயர் அலுவலர்கள் மற்றும் குளச்சல் மீனவ மக்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மோப்ப நாய் லூசிக்கு பணி நிறைவு விழா - கேக் வெட்டி மரியாதை