கன்னியாகுமரி: பேஸ்புக் காதல், டிக்டாக் காதல் என கடந்து வந்த நமக்கு, தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற காதல் திருமணம் ஒன்று கவனத்தை ஈர்த்துள்ளது. அது தொடர்பான செய்தி இதோ..
திருவட்டார் அருகேயுள்ள செறுகோல் ஆசாரிபொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் சசிகுமார். மரவியாபாரியான இவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். இளைய மகளான பபிஷா (20) என்பவர் திருவிதாங்கோடு பகுதியிலுள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கரோனா ஊரடங்கு காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், விடுமுறையில் வீட்டில் இருந்த பபிஷா, மொபைல் போனில் தொடர்ந்து பப்ஜி விளையாட்டில் ஆர்வம் காட்டியுள்ளார். பிற பிள்ளைகளைப் போல அல்லாமல் வீட்டிலேயே விளையாடிக் கொண்டுதானே உள்ளார் என்ற எண்ணத்தில் பெற்றோரும் பபிஷாவைக் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்.
ஆனால் அந்த விளையாட்டு காதலாக மாறி தனது மகளின் வாழ்க்கையை மாற்றும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பப்ஜியில் மூழ்கிய பபிஷாவிற்கு அவரைப் போலவே பப்ஜியில் மூழ்கியிருந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டேனியல் என்பவரது மகனான அஜின் பிரின்ஸ்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இது காதலாக மாறியது.
இதற்கிடையில், கடந்த 19ஆம் தேதி வீட்டைவிட்டு வெளியேறிய பபிஷா, சாலையில் தனக்காக காத்திருந்த காரில் ஏறி தனது காதலன் அஜின் பிரின்ஸுடன் தலைமறைவானார். மகளை காணாத பதற்றத்தில் சசிகுமார் திருவட்டார் காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் , காதல் ஜோடிகளைத் தேடி வந்தனர். காவல்துறையினர் தங்களைத் தேடுவதை அறிந்த காதல் ஜோடிகள் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இத்தகவலறிந்து காவல்நிலையம் வந்த அஜின் பிரின்ஸின் பெற்றோர், மகனின் காதலை பிரிப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். ஆனால் காதலர்களோ சேர்ந்து வாழ்வதில் முனைப்பாக இருந்தனர். இருவரும் அரசியலமைப்பு சட்டப்படி திருமண வயதை எட்டியதால், காவல்துறையினரே அவர்களது திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, இரு குடும்பத்தினர் முன்னிலையில் அருகிலுள்ள ஆலயத்தில் மாலைமாற்றி பபிஷாவிற்கும், அஜின் பிரின்ஸிற்கும் திருமணம் நடந்தது. பப்ஜி விளையாட்டின் மூலம் அறிமுகமாகி பின்னர் திருமணத்தில் முடிந்த இந்த காதல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படும் நிகழ்வாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய குடும்பத்தார்!