கன்னியாகுமரி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதிகளான ஆரல்வாய்மொழி, குமாரபுரம், தோவாளை, தேவசகாயம் மவுண்ட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக சுமார் அறுபது அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டி, மண் கொள்ளை நடந்து வந்தது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதோடு நிலச்சரிவுகளும் ஏற்படும் அபாயம் இருந்து வந்தது. இதனால் அச்சமடைந்த இயற்கை ஆர்வலர்களும் பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை புகார்கள் அளித்த வண்ணம் இருந்தனர்.
இதனைத்தொடர்ந்து மண் கடத்தலைத் தடுக்க, குமரி மாவட்டத்தில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் காவல் துறையினர் இருந்து வந்தனர்.
இதனிடையே ஆரல்வாய்மொழி அருகே தேவசகாயம் மவுண்ட் பகுதியில் ஜேசிபி போன்ற கனரக வாகனங்களைப் பயன்படுத்தி, ஒரு கும்பல் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக மணல் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது .
இத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற தனிப்படை காவல் துறையினர் மண் கடத்தலில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த 18 நபர்களைச் சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.
மேலும் மண் கடத்தலுக்கு பயன்படுத்திய ஹிட்டாச்சி, டாரஸ் உள்ளிட்ட 15 வாகனங்களையும் பறிமுதல் செய்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். கைது செய்யப்பட்ட 18 நபர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண் கடத்தலில் ஈடுபட்ட 18 பேர், ஒரே நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளது, குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பை தள்ளிவைக்கப்பட்டால் ஆஸி.க்கு ரூ. 400 கோடி இழப்பு?