கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஹெச்.வசந்தகுமாரின் 17ஆவது நாள் நினைவு தினத்தையொட்டி குமரி மாவட்ட ராஜாக்கமங்கலம் கிழக்கு வட்டார காங்கிரஸ் சார்பில் நேற்று(செப்டம்பர் 13) மௌன ஊர்வலம் நடைபெற்றது.
இந்த ஊர்வலம் பறக்கை செட்டித்தெரு சந்திப்பிலுள்ள காமராஜர் சிலை முன்பு தொடங்கி, தெங்கம்புதூர் சந்திப்பிலுள்ள காமராஜர் சிலை முன்பாக நிறைவடைந்தது. இதற்கு வசந்தகுமார் எம்பியின் மகன் நடிகர் விஜய் வசந்த் தலைமை வகித்தார்.
ஊர்வலத்தில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் ஸ்ரீனிவாசன், கிழக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி அருள் சபிதா ரெக்ஸ்லின், வட்டாரத் தலைவர் அசோக்ராஜ், திமுக ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்வசந்த் கூறியதாவது, "தனது தந்தை மீது பற்று வைத்த ஒவ்வொருவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதி ஊர்வலம் நடத்துகின்றனர். அவர்கள் என் தந்தை மீது மதிப்பு வைத்துள்ள காரணத்திற்காக நான் அதில் கலந்து கொண்டுள்ளேன்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு இப்போது விருப்பம் இல்லை. என் குடும்பத்தினரோடு ஆலோசித்தப்பிறகுதான் இதுகுறித்த முடிவை அறிவிப்பேன். கண்டிப்பாக கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்தான் வெற்றிப்பெறும்.
இதற்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. என் தந்தை விட்டுச் சென்ற பணிகளை ஒரு மகனாக தொடருவேன்" எனத் தெரிவித்தார்.