கன்னியாகுமரி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட போதைப் பாக்கு, புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல் துறையினருக்கு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்க தனிப்படை அமைத்த காவல் துறையினர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.
இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்துக் கல்லூரி பகுதியில் செயல்பட்டுவந்த ஒரு குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்களை விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைதுசெய்தனர். இதேபோல இருளப்பபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு குடோன் கண்டறியப்பட்டு அங்கு போதைப்பொருள் விற்ற ஒருவர் கைது செய்யப்பட்டார்.
மேலும், காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில் நாகர்கோவில், வெட்டுர்ணிமடம் அடுத்த கட்டையன்விளை பகுதியில் குடோனில் போதை பாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வடசேரி காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர், குடோனை சுற்றி வளைத்து அதிரடியாக உள்ளே புகுந்து சோதனை நடத்தினர். இதில், சுமார் 150 கிலோ எடை மதிப்பில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பாக்குகள் இருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
மேலும், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த போதைப் பொருள்களை பதுக்கிய ஜோசப் பெர்க்கமான்ஸ், அவரது மகன் மெர்வின் வினு ஆகிய இருவரையும் வடசேரி காவல் துறையினர் கைது செய்தனர். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.