கன்னியாகுமரி மாவட்டத்தில் கத்திரி வெயில் தொடங்கும் முன்பே வரலாறு காணாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலை சமாளிக்க மக்கள் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். அப்பகுதிகளில் கடும் வெயிலின் காரணமாக வெப்பம் அதிகரித்து அனல் காற்று வீசி வருவதால், நீர் நிலைகள், குளம் ஏரிகள் வறண்டு போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழையே இல்லாமல் விவசாயமும் பெருமளவில் பாதிப்படைந்து, மழை பெய்தால்தான் வறட்சி நீங்கும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. இதனிடையே நாடு நலம் பெறவும், வறட்சி நீங்கி மழை வளம் பெருக கன்னியாகுமரியில் உள்ள சுசீந்திரத்தில், குமரி மாவட்ட வள்ளலார் பேரவை சார்பில் 'கோ பூஜை' மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில், பசுவிற்கு அபிஷேகம் செய்யப்பட்டு பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மேலும், நாடு முழுவதும் மழை பெய்து வறட்சி நீங்க வருண பகவானை வேண்டி வேத மந்திரங்கள் முழங்க நடைபெற்ற இந்த கோ பூஜையில் வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர்.