கன்னியாகுமரி: மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதியான பேச்சிப்பாறை அடுத்த வலியமலை கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். கேரள மாநிலத்தில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். அவருடைய இரண்டாவது மகன் அபினேஷ் (11). மணலோடை அரசு உயர்நிலை பள்ளியில், 7ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுவன் அபினேஷ், தன் தாயாருடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு காட்டு வழியாக வலியமலை பகுதியில் உள்ள அவர்களது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறுவன் அபினேஷை பாம்பு ஒன்று கடித்ததாக கூறப்படுகிறது.
இதனைக் கண்ட சிறுவன் அபினேஷின் தாயார் உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். சிறுவனின் சத்தத்தை கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து வந்து சிறுவன் அபினேஷை மீட்டுள்ளனர். ஆனால் அப்பகுதியில் போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் டோலி கட்டி, காட்டு வழியாக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் வரை சுமந்து சென்றுள்ளனர்.
பின்னர் அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றின் மூலமும், குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுவன் அபினேஷை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து குலசேகரம் காவல் நிலையத்திற்க்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் குலசேகரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போதிய போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தினால் உரிய நேரத்தில் பாம்பு கடியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல், 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் வலியமலை மலைக் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தங்கள் கிராமங்களில் போதிய மருத்துவ வசதியை ஏற்படுத்தும் விதமாக, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டு, அங்கு 24 மணி நேரமும் மருத்துவர் மற்றும் மருத்துவ உதவியாளரும் பணியில் அமர்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை வலியமலை கிராம மக்கள் நீண்ட காலமாக முன்வைத்தும், எந்த அரசும் தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவில்லை என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள மலைக் கிராமங்களில் போதிய மின் வசதியும், போக்குவரத்து வசதியும், மருத்துவ வசதியும் இல்லாத ஒரு நிலை இருந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அவசர கால உதவிக்கு, பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை சரி செய்திட அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை முனவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: நாகர்கோவிலில் அரசு பெண் மருத்துவருக்கு பாலியல் தொல்லை வழக்கில் அரசு மருத்துவர் கைது!