தமிழ்நாட்டில் கரோனா தொற்று மூன்றாவது அலை பரவாமல் தடுக்க அரசு சார்பில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாள்களில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் ஆடி மாதம் என்பதால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்தது.
தற்போது ஆடி மாதம் முடிந்த நிலையில் சுபமுகூர்த்த நாளான இன்று (ஆக 20) குன்றத்தூர் முருகன் கோயிலில் 30க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.
இரு திருமண வீட்டார் இடையே தகராறு
முருகன் கோயிலில் வழக்கம்போல் நடைபெறும் திருமணங்கள்போல் இல்லாமல் இன்று ஒவ்வொரு ஜோடிகளுக்கும் 15 நிமிடங்களில் ஒரே இடத்தில் திருமணம் நடத்தி முடிக்கப்பட்டது.
திருமணத்திற்கு வந்த உறவினர்களுக்கு உணவு அளிப்பதற்காக மலையடிவாரத்தின் கீழுள்ள பகுதிகளில் பந்தல்கள் அமைத்து உணவு பறிமாறப்பட்டது. ஒரே நேரத்தில் திருமணத்திற்கு வழக்கம்போல் ஏராளமான பொதுமக்கள் தனிமனித இடைவெளியின்றி அதிகளவில் கூடியதால் மூன்றாவது அலை பரவும் சூழல் ஏற்பட்டது.
கோயிலில் நடந்த திருமணத்தின்போது கூட்ட நெரிசலில் யார் முதலில் கோயிலுக்குள் சென்று தாலி கட்டி கொள்வது என்ற பிரச்னையால் இரு திருமண வீட்டார் இடையே தகராறு ஏற்பட்டது.
கரோனா பரவும் அபாயம்
இதில், கோயில் வளாகத்திற்குள்ளேயே இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவலர் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். கரோனா மூன்றாவது அலை உருவாக தற்போது இந்த திருமணங்கள் ஒரு காரணமாகிவிடுமோ என்ற பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த திருமணங்களின் போது பொதுமக்கள் யாரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் கோயிலுக்கு வந்த காவல் துறையினர், அதிகளவில் இருந்த மக்களை வெளியேற்றி, கோயில் வளாகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: காவல் துறையினர் கண் முன்னே வழக்கறிஞர்கள் மோதல் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி