காஞ்சிபுரம்: மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாங்கப்படும் சொத்துகளுக்கு பெயர் மாற்றம் மற்றும் நில அளவை செய்ய காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள நில அளவை பிரிவில் விண்ணப்பித்து அதை நில அளவையர் சரி பார்த்து அதன் பின்னரே பெயர் மாற்றம் செய்யப்படும்.
இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயன்குட்டை மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் டில்லிபாபு சகோதரர்கள், தமால்வார் தெரு பகுதியில் வேல்முருகன் என்பவரிடம் சிறிய வீட்டு மனை ஒன்றை வாங்கி, இதனை முறையாக காஞ்சிபுரம் சார்பதிவாளர் அலுவலகம் -1ல் பத்திரப்பதிவும் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள நில அளவை பிரிவில் புதியதாக தாங்கள் வாங்கிய இடத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய தினேஷ் விண்ணப்பித்துள்ளார்.
அதன்படி நில அளவை பிரிவில் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து அதனை தவறுதலாக பதிவு செய்துள்ளார். இதை சரி செய்து தருமாறு தினேஷ் கேட்டபோது அவரிடம் ரூபாய் ஐந்தாயிரம் பணத்தை லஞ்சமாக கேட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அலுவலகத்திலுள்ள நில அளவை பிரிவிற்கு சென்று தினேஷ் முறையிட்டபோது நில அளவை பரிவில் போதிய அலுவலர்கள் இல்லாததால், தனிப்பட்ட முறையில் உதவியாளர்களை வைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்படுவதாகும், அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் லஞ்சப் பணத்தில் தான் சம்பளம் வழங்குவதாகவும், தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அலுவலர்கள் தினேஷை போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, திருத்தங்களுடன் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு நிறைவு பெற்றதாகும், ரூபாய் 5 ஆயிரம் கொடுத்துவிட்டு பெற்றுக் கொள்ளுமாறு கூறியதை தொடர்ந்து, தற்போது தன்னிடம் பணம் இல்லாததால் ஓரிரு வாரம் கழித்து மாநகராட்சி அலுவலகம் வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது இது தொடர்பாக உரிய நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் எடுக்க வேண்டும் என தினேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். சினிமாவில் கவுண்டமணி ஆளை கடத்திவிட்டு பேரம் பேசுவது போல் தற்போது இந்த ஆடியோ வீடியோ பதிவுகளும் உள்ளது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்திலுள்ள நில அளவை பிரிவு ஊழியர்கள் அப்பட்டமாக லஞ்சம் கேட்கும் வீடியோ மற்றும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி பெரும் பரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வாடகைக்கு வீடு கேட்பதுபோல் நடித்து நகை திருடிய நிறைமாத கர்ப்பிணி கைது