சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 64ஆவது நினைவுநாள் இன்று (டிச. 06) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் டாக்டர் அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருகின்றனர்.
அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியிலுள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் எத்தனையோ பேர் இருக்கையில், ரசிகர் மன்றத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லாத பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த் நியமித்திருக்கிறார்.
உடல்நலம் சரியில்லை என்று சொன்னவர் திடீரென அரசியல் கட்சி தொடங்கியிருப்பது அச்சுறுத்தல் காரணமாக எடுத்த முடிவாகவே இருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. அவர் பாஜகவின் இன்னொரு முகமாக இருப்பார் என்றே சொல்லத் தோன்றுகிறது.
தொடர்ந்து 10 நாள்களாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வரும் 8ஆம் தேதி பாரத் பந்த் நடைபெறுகிறது. அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது.
மேலும் மத்திய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 10ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்தார்.