காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் காஞ்சிபுரம் சென்றிருந்தார்.
இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தேரடிப் பகுதியில் உள்ள காதி அங்காடியில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று விற்பனை செய்யும் பொருள்களைப் பார்வையிட்டு பொதுமக்களை வாங்கிட ஊக்கப்படுத்தினார்.
புலியின் எண்ணிக்கை முக்கியம்
இதையடுத்து செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி (சரக்கு - சேவை வரி) வரம்பிற்குள் கொண்டுவர வேண்டுமென தெரிவித்துவந்த திமுக, தற்போது ஆட்சிக்கு வந்தபின்பு சரக்கு - சேவை வரி வரம்பிற்குள் கொண்டுவர எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
அதனால் இரட்டை நிலைப்பாட்டை திமுக விட்டு, சரக்கு - சேவை வரி வரம்பிற்குள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் ஆட்கொல்லி புலியைச் சுட்டுக்கொல்ல வேண்டாம். புலிகளுடைய எண்ணிக்கை என்பது மிக மிக முக்கியமானது.
அதை ஒற்றைப் புலி என்பதைத் தாண்டி ஒட்டுமொத்த விஷயமாகக் கருத வேண்டும். தமிழ்நாடு வனத் துறை மிக கவனமாகச் செயல்பட்டு புலியை வனத்துக்குள் திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மகாத்மா காந்தி சிலைக்கு ஆளுநர், முதலமைச்சர் மலர்தூவி மரியாதை