மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் 104ஆவது பிறந்த நாள் தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் காந்தி ரோட்டில் அதிமுக பொதுக்கூட்டம் நேற்று (ஜனவரி 18) நடைபெற்றது. இதில் அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் மேடையில் பேசியதாவது, "வாடகை பாக்கி வைத்திருந்த ரஜினிகாந்த், இறுதியில் என்னிடம் வாடகை கேட்காதீர்கள் நான் அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார். டிடிவி தினகரன், உலக அரசியல் வரலாற்றிலேயே வாக்காளர்களுக்கு கடன் வைத்த ஒரே நபராவார். கமல்ஹாசன் மிகப்பெரிய டார்ச்சர், அதனால்தான் அவர் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என நடிகை கௌதமி கூறுகிறார். பிக்பாஸில் பங்குபெற்ற சிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டுகள் கூட கமல்ஹாசனுக்கு கிடைக்காது. ஏனெனில் ரம்யா பாண்டியனுக்கு நானே 5 ஓட்டுக்கள் போட்டுள்ளேன்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, "கமல்ஹாசன் கூறியது அப்பட்டமான பொய். விஸ்வரூபம் திரைப்படத்திற்கு ஜெயலலிதா இருக்கும் போது எவ்வளவு உதவிகளை செய்தார்கள். இருப்பினும் அப்போது கமல்ஹாசன் நாட்டைவிட்டு செல்வதாக கோழையைப் போல் பேசினார். நாட்டுப் பற்று இல்லாத கமல்ஹாசனின் பேச்சை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். துக்ளக் விழாவில் குருமூர்த்தி நீதிபதிகளை பற்றி கூறிய கருத்து மிகவும் தவறானது. நீதிபதிகளை எந்த ஒரு இடத்திலும் குறை கூறக்கூடாது. திமுகவை வீழ்த்த அதிமுக ஒன்றே போதும், அதிமுக பலம் மிகுந்த இயக்கம்" என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு விரைவில் நல்லது நடக்கும்- அமைச்சர் ஓ.எஸ். மணியன்