காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உடையார்பாளையம் உற்சவத்தை முன்னிட்டு கரோனோ விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து குறைந்த அளவு பக்தர்கள் கலந்துகொண்டனர். உலக பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோயிலான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உடையார்பாளையம் உற்சவம் சனிக்கிழமை (ஏப்.10) நடைபெற்றது.
நவாப்களின் படையெடுப்பின் போது காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவ மூர்த்திகள் உடையார்பாளையம் சமஸ்தானத்தில் வைத்து பாதுகாக்க பட்டதாகவும், அதன் காரணமாக உடையார் பாளையம் சமஸ்தான மகாராஜாவை பெருமைப்படுத்தும் வகையில் அவரது பிறந்த நாளில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் உற்சவம் கண்டருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.
அதன்படி உடையார்பாளையம் மகாராஜாவின் பிறந்த நாளான ஏப்.10ஆம் தேதி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, மல்லிகை, மனோரஞ்சிதம், செண்பக பூமாலைகள், தங்க நகை ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளினார்.
கரோனா பரவல் தடுப்பு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் கோயில் வளாகத்தில் அர்ச்சகர்கள், பக்தர்கள் என அனைவரும் கரோனா விதிமுறைகளை பின்பற்றி முகக்கவசங்கள் அணிந்து, குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கோயிலின் உள் பிரகாரத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.